"காதலுக்கு கண் இல்லை என்று யார் சொன்னது? அப்படியே கண் இல்லை என்றால் அழகான உன்னை நான் எப்படி கண்டிருப்பேன்? நாம் அழகான காதலை எப்படி மற்றவர்கள் தெரிந்திருப்பார்கள்?
முதன் முதலாக நம் இருவரது கண்களும் மோதி விபத்துக்குள்ளானபோது, அதை படம் பிடித்ததும் அதே கண்கள்தானே? ஏதோவென்று வாழ்ந்து கொண்டிருந்த என்னை அழகானவன் ஆக்கியதும், எனக்கென்று புது சொந்தத்தை அடையாளம் காண்பித்ததும் நம் காதல்தானே?"
- இன்றைய காதலர்கள் பலர், தங்கள் காதல் கடிதத்தை இப்படித்தான் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மனதில் புத்துணர்ச்சி இருந்தால் ஆரோக்கியமான சிந்தனை ஒருவருக்கு தானாக வந்துவிடும். நல்ல புத்தகங்களுக்கு மட்டுமல்ல, நல்ல காதலுக்கும் ஆரோக்கியமான சிந்தனையைத் தரும் பவர் இருக்கிறது.
இதனால்தான் காதலில் விழுந்தவர்கள், தேனில் விழுந்துவிட்ட தேன்வண்டைப்போல் இறுதிவரை போராடிப் பார்க்கிறார்கள்.
கடிதங்களின் அருமை காதலர்களுக்குத்தான் தெரியும். அதுவும், முதன் முதலாக எழுதிய காதல் கடிதத்திற்கும், முதன் முதலாக காதலனோ, காதலியோ தந்த கடிதத்திற்கும் தனி பவரே இருக்கிறது.
காதலில் தோற்றுப்போனவர்களும்கூட, முன்னாள் காதலி தனக்கு எழுதிய கடிதத்தை, பரிசாக தந்த பொருட்களை யாருக்கும் தெரியாமல் பத்திரப்படுத்தி வைத்திருப்பதை இன்றும் காண முடிகிறது. எப்பொழுதாவது அந்த முன்னாள் காதலியின் நினைவு வரும்போது, தங்களது காதல் வாழ்க்கையை மனதிற்குள் புரட்டிப் பார்க்கிறார்கள். கூடவே, நிறம் மாறிப்போன அந்த பழைய காதல் கடிதத்தையும் படித்து, முடிவுரை எழுதப்பட்ட அந்த காதலை நினைத்து சிலிர்க்கிறார்கள்.
காதலில் விழுந்துவிட்டால் கவிதைகளும் பிறந்து விடுகின்றன. காரணம், மகிழ்ச்சியின் உச்சத்தில் திக்கு முக்காடும் மனம்தான்.
"பன்னீரின் மனமும் தோற்றது
ஜவ்வாதும் வெறுப்பேற்றியது
அருகில் என்னவள் இருந்ததால்..." என்றெல்லாம் சிலிர்ப்பவர்கள், காதலிக்காக கற்பனையை கன்னாபின்னாவென பறக்க விடுகிறார்கள்.
"அந்த ஈயை பார்த்துக்கூட
எனக்கு பொறாமை;
நீ காபி குடித்த டம்ளரை
அது எச்சில்படுத்தியபோது..." என்று கவிதையும் எழுதி பரவசப்படுகிறார்கள்.
அழகான விஷயங்களை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. காதலும் ஒரு அழகான விஷயம்தான்.
முதன் முதலாக ஒரு அழகான பெண்ணைப் பார்த்து பரவசப்படும்போது, அவள் தனக்கு காதலியாக இருந்தால் எப்படி இருக்கும்? என்று கணக்கு போடுகிறார்கள். காதலியாக வருவாளா? வரமாட்டாளா? என்று எண்ணியவளிடம் பேசுகின்ற ஒரு வாய்ப்பு கிடைத்தாலுமே, அவளை காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.
என்ன செய்கிறோம் என்பதுகூட அவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது. கெமஸ்ட்ரி புத்தகத்திற்கு பதிலாக பயாலஜி புத்தகத்தை எடுத்துக்கொண்டு வகுப்புக்கு செல்வதும், சாப்பிட்டோமா? சாப்பிடவில்லையா? என்பதுகூட தெரியாமல், ஏன்... அம்மா மெடிக்கலில் வாங்கி வரச்சொன்ன மருந்தையும் கூட மறந்து இன்பமான தவிப்பில் சிக்குகிறார்கள்.
"நேரமும் தெரியவில்லை;
காலமும் புரியவில்லை;
உன்னை கண்ட நாள் முதல்
இரவும் பகலாகிப் போனதால்..." என்றும் கவிதையும் தீட்டி விடுகிறார்கள்.
காமம் இன்றி காதல் இல்லை. காதல் போதையில் ஆணும், பெண்ணும் முழுமையாக சிக்கிக் கொண்டால் அங்கே காமத்திற்கும் இடம் கிடைத்துவிடுகிறது. தங்களை தீண்டிக்கொள்கிறார்கள்; அதனால், சிலிர்த்துக் கொள்கிறார்கள்.
அப்போதும் அவர்களுக்குள் கவிதை ஊற்றெடுக்கிறது.
"திடீர் விபத்து!
ஆனால்
இன்ப அதிர்ச்சி!
இங்கே மோதியது
நீயும், நானும் அல்லவா?" என்று கண்களால் காதல் கவிதை பேசுகிறார்கள்.
காதலுக்கு காதலி ஓ.கே. சொல்லிவிட்டால், அந்த காதலி மீது இன்னும் அதிகமாக உரிமை கொண்டாடுகிறான் காதலன். அவள் தனக்கு மாத்திரமே என்று உறுதியாக நம்புகிறான். அவளை இன்னொருவன் தவறான நோக்கத்தில் பார்த்துவிட்டால் இவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது. அவனை அடிக்கப் பாய்ந்து விடுகிறான்.
"உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது!" என்று அப்போது லேசாக கோபப்படும் காதலியை சமாதானப்படுத்த வேண்டாமா? அப்போதும் அந்த காதலனுக்குள் கவிதைதான் பிறக்கிறது. அந்த கவிதையிலேயே அவளுக்கு "ஐஸ்" வைக்கிறான்.
"புளுட்டோனியத்தைவிட
உன் பார்வைக்கு பவர் அதிகம்
ஒத்துக் கொள்கிறேன்;
உனது ஒரு பார்வையிலேயே
என் இதயம் நொறுங்கிவிட்டதே..." என்று காதலன் பொய்யாக சொன்னாலும்கூட, தனது கோபத்தை மறந்து சிரித்து விடுகிறாள் காதலி.
எல்லோரும் காதலிக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், காதலனோ, காதலியோ எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. சிலர் ஒருதலையாக காதலிப்பார்கள். ஆனால், காதலை எப்படி வெளிப்படுத்துவது? என்பது தெரியாமல் வானம் பார்த்த பூமி போல் காத்திருப்பார்கள்.
சொன்னால்தான் காதல் என்பார்கள். எதையும் சொன்னால்தான் தெரியும். மனதிற்குள்ளேயே எந்த விஷயத்தையும் போட்டு குழப்புவதால் எந்த பயனும் கிடையாது. காதலும் அப்படித்தான்!
உரியவரிடம் அதை சொன்னால்தான் நல்லது. இல்லையென்றால், சோகம்தான் மிஞ்சும்.
சிலர் ஒருதலையாக காதலிக்கும் காதலி, அவர்களைவிட அந்தஸ்தில், அழகில் உயர்வானவளாக இருக்கலாம். அவள் தனக்கு கிடைக்க மாட்டாள் என்பது உறுதியாக தெரிந்திருந்தும் காதலிப்பார்கள். அவளிடம் ஒரு வார்த்தை பேச இவர்களிடம் ஓராயிரம் தவிப்புகள் இருந்தாலும், அவளது ஓரப்பார்வை ஒன்றுக்காக காத்துக்கிடப்பார்கள்.
அப்போது, அவர்களே கவிதை எழுதி, அவளிடம் கொடுக்காமல் அவர்களே வைத்துக்கொள்வார்கள். அவ்வப்போது அந்த கவிதையை படித்துப் பார்த்து, ஏக்க பெருமூச்சு விட்டுக்கொள்வார்கள்.
"நீ பூமி
நான் சந்திரன்
உன்னையே
சுற்றி சுற்றி வருகிறேன்;
சந்திக்க முடியாது என்று
உறுதியாக தெரிந்தும்...!" என்று தங்களுக்கு தாங்களே ஆறுதல் கவிதை தீட்டிக் கொள்வார்கள்.
விதி விளையாடாத களமே கிடையாது. காதலும் அதற்கு விதிவிலக்கல்ல. சிலநேரங்களில் சூழ்நிலையின் காரணமாக தனது காதலி இன்னொருவனுக்கு மனைவியாகும் சூழ்நிலை ஏற்படலாம். அப்படி இன்னொருவனுக்கு தனது காதலி மனைவியாகிவிட்டால், அந்த காதலன் அனுபவிக்கும் துயரத்திற்கு அளவே இல்லாமல் போய்விடும்.
ஒருசில காதலர்கள், இன்னொருவனுக்கு மாலையிட்ட தனது காதலியை "எங்கிருந்தாலும் வாழ்க" என்று கூலாக வாழ்த்தி விடுவார்கள். கூடவே,
"இப்போது
என் முன் இறைவன் தோன்றினால்
ஒரு வரம் தான் கேட்பேன்;
உன் கொலுசாய் நான் மாற...
ஏன்..?
நீ கேட்கலாம்;
உன் இதயத்தை திருடியது
நான் என்று தெரியாமல்
இன்னொருவனுக்கு
மாலையிட்டு விட்டாயே...!" என்று நப்பாசை கவிதையும் வரைந்து தங்களுக்கு தாங்களே ஆறுதல் தேடிக் கொள்வார்கள்.
காதலுக்கு இரு பெற்றோர் தரப்பிலும் சம்மதம் கிடைத்துவிட்டால், அந்த பொழுதுதான் அந்த காதலர்களுக்கு உண்மையான சொர்க்கம். அப்போது,
"தேனைவிட இனியபொருள்
உண்டென்று உணர்ந்தேன்
உன் எச்சிலை
என் இதழ்
முதன் முதலாக ஈரப்படுத்தியபோது...!" என்று, எப்போதோ எதிர்பாராமல் நடந்த சம்பவத்தை சட்டென்று நினைத்து ஒரு ஹைக்கூ கவிதையும் தீட்டி, காதலியை வெட்கத்தில் நனைத்துவிடுவார்கள்.
வாலிப பருவத்தில் காதல் எண்ணங்கள் இல்லாமல் யாருமே இருக்க முடியாது. உடலில் சுரக்கும் பருவ வளர்ச்சிக்கான ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள்தான் அதற்கு காரணம்.
இந்த ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும்போது, அழகான பெண்களைப் பார்த்தால் ஆண்களுக்கும், மிடுக்கான ஆண்களைப் பார்த்தால் பெண்களுக்கும் பார்த்த மாத்திரத்திலேயே காதல் வந்து விடும். மனதிற்குள் ஒரு ரோஜாக்கூட்டமே மலர்ந்து மணம் வீசுவதுபோல் இருக்கும்.
காதல் வருவது இயற்கை. அந்த காதல் உங்கள் வாழ்க்கையை உயர்த்துவதாக, அதாவது உங்கள் படிப்புக்கு ஏற்றம் தருவதாக இருந்தால் நிச்சயம் காதலிக்கலாம். காதல் போதையில் முழுவதுமாக வீழ்ந்துவிட்டால்தான் ஆபத்து.
அதனால், உண்மையாக காதலியுங்கள். அந்த காதல் உங்களை, உங்கள் குடும்பத்தாரை இந்த சமூகத்தில் பெருமைப்படுத்துவதாக இருக்கட்டும்!

