* உங்களுக்கு வரன் தேடிக் கொண்டிருக்கிறார்களா?
* விரைவில் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்க காத்துக்கொண்டு இருக்கிறீர்களா?
அதற்கு நீங்கள் எப்படி தயாராக வேண்டும் என்பது பற்றி இங்கே சற்று அலசிப் பார்ப்போம்.
திருமணத்தை ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்வார்கள். அதனால் தான், இந்த விஷயத்தில் எந்த முடிவை எடுத்தாலும் சட்டென்று எடுக்காமல் யோசித்து, யோசித்து எடுப்பார்கள். ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை முடிக்கலாம் என்ற கருத்தும் மக்களிடையே உலா வருகிறது.
அதனால், திருமண பேச்சில் சில முதல் பல வரையிலான பொய்களை சிலர் "கோர்த்து" விடுவதையும் நாம் நேரில் கண்டுகொண்டு தான் இருக்கிறோம்.
இப்படி பொய்யைச் சொல்லி முடியும் திருமணங்களில் குழப்பம் தான் மிஞ்சுமே தவிர, மகிழ்ச்சி எஞ்ச வாய்ப்பு மிகக் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.
தங்கள் மகளுக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருக்கும் இன்றைய பெற்றோர்களில் பலர், மாப்பிள்ளையின் வசதி எப்படி என்பதைத் தான் முதலில் பார்க்கிறார்கள். குணம் எல்லாம் அதற்கு அப்புறம் தான். அதேபோல், தங்கள் மகனுக்கு பெண் தேடும் பெற்றோர்களில் பலர், எந்த இடத்தில் அதிக வரதட்சணை தருகிறார்கள் என்று "நோட்டுக்காக" நோட்டம் பார்க்கின்றனர்.
இந்த தவறான அணுகுமுறை இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
ராமையாவுக்கு அவரது பெற்றோர் பெண் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், எந்த பெண்ணும் அமைவது போல் தெரியவில்லை. காரணம், ராமையா போட்ட கன்டிஷன் அப்படி. கருகருவென்று இருக்கும் அவர் செக்கச்செவேல் என்று இருக்கும் பெண்ணுக்கு ஆசைப்பட்டார். அதன் விளைவு... பல இடங்களில் பெண் பார்க்கச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது தான் மிச்சம்.
ஒரு நாள் பக்கத்து டவுனில் அழகான பெண் வரன் இருப்பதாக ராமையா பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. அந்த பெண்ணாவது நமது பையனுக்கு அமையுமா என்று பார்த்துவிடுவோம் என்று புறப்பட்டார்கள். இந்த முறை ராமையாவை வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.
டவுனில் உள்ள பெண்ணை பார்த்தார்கள். ஆனால், எதிர்பார்த்த செக்கச்செவேல் என்று அவள் இல்லை. பரவாயில்லை என்று தான் அவர்களுக்கு சொல்லத் தோன்றியது.
இந்த பெண்ணையும் விட்டுவிட்டால் பெண்ணை தேடிக்கொண்டே தான் இருக்க வேண்டும் என்று கணக்கு போட்ட ராமையாவின் பெற்றோர், பெண்ணின் போட்டோவை மட்டும் வாங்கிவிட்டு, "நல்ல தகவலா" சொல்கிறோம் என்று கூறிவிட்டு வந்துவிட்டனர்.
வீட்டில் ஆவலோடு காத்திருந்த ராமையா, பெண் எப்படி? என்று பெற்றோரிடம் கேட்டார். "எங்களுக்கு ஓ.கே.! உனக்கு எப்படி என்பதை போட்டோவை பார்த்து தெரிந்துகொள்" என்று கூறி, அந்த போட்டோவை கொடுத்தனர்.
போட்டோவை பார்த்த ராமையாவுக்கு குழப்பம் தான் வந்தது. ரொம்பவும் அழகு என்றும் சொல்ல முடியாது, அழகு இல்லை என்றும் சொல்ல முடியாது என்கிற அளவுக்கு அவரது பார்வையில் அந்த பெண் தெரிந்தாள். அந்த அளவுக்கு மேக்கப் போட்டிருந்தாள் போட்டோவில் இருந்த பெண். தனக்கு அவள் பொருத்தமாக இருப்பாளா? என்று பெற்றோரிடமே கேட்டுப் பார்த்தார்.
பொருத்தமாக இருப்பாள் என்று அவர்கள் தலையசைக்க, திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார் ராமையா.
அடுத்த மாதத்திலேயே திருமணம் நடந்தது. மணமேடையில் வெட்கப்பட்டுக் கொண்டே தன்னால் முடிந்தவரை பெண்ணை திரும்பி பார்த்தார். பெண் கலராக இருப்பதுபோல் தான் தோன்றியது. அப்போதும் அந்த பெண் அதிக அளவில் மேக்கப் போட்டிருந்தாள். கிராமத்திலேயே பிறந்த வளர்ந்த ராமையாவுக்கு அதை கண்டுபிடிக்க முடியவில்லை. பெண், நம்மைவிட கலர் தான் முடிவு செய்து கொண்டார்.
இருட்டில் நடந்த முதலிரவிலும் அவரால் தனது மனைவியின் உண்மையான கலரை கண்டுபிடிக்க முடியாமல் போனது. மறுநாள் காலை குளித்துவிட்டு ப்ரெஷ் ஆக திரும்பிய மனைவியை பார்த்து அதிர்ச்சியாகிவிட்டார். ஏறக்குறைய அவரது நிறத்தில் தான் இருந்தாள் அவள்.
அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு இப்படி ஆகிவிட்டதே என்று தன்னைத்தானே நொந்து கொண்டார் ராமையா. தன்னைவிட கொஞ்சம் கூடுதலான கலர் கொண்ட பெண்களைக்கூட தான் முன்பு நிராகரித்தது தவறு என்று இப்போது தான் அவருக்கு புரிந்தது. இருந்தாலும் என்ன பயன்? எல்லாம் முடிந்து போயிற்றே!
ராமையா மாதிரி தான் பலரும் ஆசைப்படுகிறார்கள். எதற்கோ குறி வைத்து, கடைசியில் எதையோ அடித்து சொந்தமாக்கிக் கொள்கிறார்கள்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். ஜாதகத்தில் ஒன்பது பொருத்தம் இருந்தால் தான் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள். இல்லையென்றால் அடுத்த வரனுக்கு தாவி விடுகிறார்கள். இப்படி ஜாதகம் பார்த்து நல்ல வரன்களை எல்லாம் இழந்து, கடைசியில் ஏதோ ஒரு வரனுக்கு ஜாதகம் பொருத்தம் இருக்கிறது என்று கூறி கட்டி வைத்து விடுகிறார்கள். அப்படி திருமணம் செய்து வைத்து சீரழிந்த குடும்பங்களும் இருக்கத் தான் செய்கின்றன.
இன்று இன்டர்நெட் வழியாக இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே வரனை தேடினாலும், அங்கேயும், ஜாதக பொருத்தம் இருக்கிறதா? என்று கேட்கக்கூடிய நிலையில் தான் இன்றைய சமுதாயம் இருந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையில் நம்மதி வேண்டும் என்றால், துணையை தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் பார்க்க வேண்டியது ஜாதகப் பொருத்தம் அல்ல மனப்பொருத்தம் தான். இதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
* உங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ வரன் தேடும்போது, அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் எந்த மாதிரியான துணையை விரும்புகிறார்கள் என்பதை மனம் விட்டு கேளுங்கள். மகள் என்றால் ஒரு தாய் கேட்கட்டும். அல்லது தோழியரோ, சகோதரியோ கேட்கட்டும். மகன் என்றால் தந்தையோ அல்லது மிகவும் நெருங்கிய உறவினரோ அல்லது சகோதரனோ கேட்கட்டும்.
* ஜாதகம் என்பது நம்பிக்கையின் அடிப்படையிலானது தான். அதை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நல்ல வரன்களை விட்டுவிடாதீர்கள்.
* வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்றால் துணையாக வரக்கூடியவ(ள்)ர் மனம் ஒத்து வாழ வேண்டும். என்ன தான் வசதி, வாய்ப்புகள் இருந்தாலும் மனம் ஒத்துப்போகவில்லை என்றால் அந்த வாழ்க்கைக்கு அர்த்தமே கிடையாது.
* சிலருக்கு ஜாதகத்தில் தோஷம் உள்ளது என்று கூறி, அவர்களது வாழ்க்கையையே நரகமாக்கி விடுகிறார்கள். அவர்கள் என்ன, பாவம் செய்தவர்களா? அவர்களும் அடுத்தவர்கள் போல் ஆசை உள்ளிட்ட எல்லாமுமே கொண்டவர்கள் தானே? அவர்களை ஏன், ஜாதகம் என்கிற பெயரில் வெளியில் தெரியாத கொடுமைகளுக்கு நாமே ஆளாக்க வேண்டும்?
* ஒருவேளை, நீங்கள் ஜாதகத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டிருந்தால், அந்த நம்பிக்கையுடன் மனப்பொருத்தத்தையும் பாருங்கள். அதாவது, திருமணம் செய்து கொள்ளப்போகும் இருவரது விருப்பங்களும் என்ன? அவர்கள் எந்த மாதிரி ஆசைப்படுகிறார்கள்? என்பதையெல்லாம் கேட்டு, அதன்பின் திருமணம் செய்து வையுங்கள்.
- உண்மையைச் சொல்லப்போனால் வாழ்வின் நம்மதி இருப்பது நம் இல்லத்து சன்னதியில் தான். அதாவது, கணவன்-மனைவியரது மனம் என்னும் சன்னதியில் தான்! அந்த உள்ளத்து சன்னதியை உண்மையாக உணர்ந்து கொண்டால், இந்த பூலோக வாழ்க்கையும் சொர்க்கமே!






