வரன் தேடிக் கொண்டிருக்கிறார்களா?


* உங்களுக்கு வரன் தேடிக் கொண்டிருக்கிறார்களா? 

* விரைவில் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்க காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? 

அதற்கு நீங்கள் எப்படி தயாராக வேண்டும் என்பது பற்றி இங்கே சற்று அலசிப் பார்ப்போம்.


திருமணத்தை ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்வார்கள். அதனால் தான், இந்த விஷயத்தில் எந்த முடிவை எடுத்தாலும் சட்டென்று எடுக்காமல் யோசித்து, யோசித்து எடுப்பார்கள். ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை முடிக்கலாம் என்ற கருத்தும் மக்களிடையே உலா வருகிறது.

அதனால், திருமண பேச்சில் சில முதல் பல வரையிலான பொய்களை சிலர் "கோர்த்து" விடுவதையும் நாம் நேரில் கண்டுகொண்டு தான் இருக்கிறோம்.
இப்படி பொய்யைச் சொல்லி முடியும் திருமணங்களில் குழப்பம் தான் மிஞ்சுமே தவிர, மகிழ்ச்சி எஞ்ச வாய்ப்பு மிகக் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.

தங்கள் மகளுக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருக்கும் இன்றைய பெற்றோர்களில் பலர், மாப்பிள்ளையின் வசதி எப்படி என்பதைத் தான் முதலில் பார்க்கிறார்கள். குணம் எல்லாம் அதற்கு அப்புறம் தான். அதேபோல், தங்கள் மகனுக்கு பெண் தேடும் பெற்றோர்களில் பலர், எந்த இடத்தில் அதிக வரதட்சணை தருகிறார்கள் என்று "நோட்டுக்காக" நோட்டம் பார்க்கின்றனர்.
இந்த தவறான அணுகுமுறை இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ராமையாவுக்கு அவரது பெற்றோர் பெண் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், எந்த பெண்ணும் அமைவது போல் தெரியவில்லை. காரணம், ராமையா போட்ட கன்டிஷன் அப்படி. கருகருவென்று இருக்கும் அவர் செக்கச்செவேல் என்று இருக்கும் பெண்ணுக்கு ஆசைப்பட்டார். அதன் விளைவு... பல இடங்களில் பெண் பார்க்கச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது தான் மிச்சம்.

ஒரு நாள் பக்கத்து டவுனில் அழகான பெண் வரன் இருப்பதாக ராமையா பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. அந்த பெண்ணாவது நமது பையனுக்கு அமையுமா என்று பார்த்துவிடுவோம் என்று புறப்பட்டார்கள். இந்த முறை ராமையாவை வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

டவுனில் உள்ள பெண்ணை பார்த்தார்கள். ஆனால், எதிர்பார்த்த செக்கச்செவேல் என்று அவள் இல்லை. பரவாயில்லை என்று தான் அவர்களுக்கு சொல்லத் தோன்றியது.

இந்த பெண்ணையும் விட்டுவிட்டால் பெண்ணை தேடிக்கொண்டே தான் இருக்க வேண்டும் என்று கணக்கு போட்ட ராமையாவின் பெற்றோர், பெண்ணின் போட்டோவை மட்டும் வாங்கிவிட்டு, "நல்ல தகவலா" சொல்கிறோம் என்று கூறிவிட்டு வந்துவிட்டனர்.

வீட்டில் ஆவலோடு காத்திருந்த ராமையா, பெண் எப்படி? என்று பெற்றோரிடம் கேட்டார். "எங்களுக்கு ஓ.கே.! உனக்கு எப்படி என்பதை போட்டோவை பார்த்து தெரிந்துகொள்" என்று கூறி, அந்த போட்டோவை கொடுத்தனர்.


போட்டோவை பார்த்த ராமையாவுக்கு குழப்பம் தான் வந்தது. ரொம்பவும் அழகு என்றும் சொல்ல முடியாது, அழகு இல்லை என்றும் சொல்ல முடியாது என்கிற அளவுக்கு அவரது பார்வையில் அந்த பெண் தெரிந்தாள். அந்த அளவுக்கு மேக்கப் போட்டிருந்தாள் போட்டோவில் இருந்த பெண். தனக்கு அவள் பொருத்தமாக இருப்பாளா? என்று பெற்றோரிடமே கேட்டுப் பார்த்தார்.

பொருத்தமாக இருப்பாள் என்று அவர்கள் தலையசைக்க, திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார் ராமையா.

அடுத்த மாதத்திலேயே திருமணம் நடந்தது. மணமேடையில் வெட்கப்பட்டுக் கொண்டே தன்னால் முடிந்தவரை பெண்ணை திரும்பி பார்த்தார். பெண் கலராக இருப்பதுபோல் தான் தோன்றியது. அப்போதும் அந்த பெண் அதிக அளவில் மேக்கப் போட்டிருந்தாள். கிராமத்திலேயே பிறந்த வளர்ந்த ராமையாவுக்கு அதை கண்டுபிடிக்க முடியவில்லை. பெண், நம்மைவிட கலர் தான் முடிவு செய்து கொண்டார்.

இருட்டில் நடந்த முதலிரவிலும் அவரால் தனது மனைவியின் உண்மையான கலரை கண்டுபிடிக்க முடியாமல் போனது. மறுநாள் காலை குளித்துவிட்டு ப்ரெஷ் ஆக திரும்பிய மனைவியை பார்த்து அதிர்ச்சியாகிவிட்டார். ஏறக்குறைய அவரது நிறத்தில் தான் இருந்தாள் அவள்.

அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு இப்படி ஆகிவிட்டதே என்று தன்னைத்தானே நொந்து கொண்டார் ராமையா. தன்னைவிட கொஞ்சம் கூடுதலான கலர் கொண்ட பெண்களைக்கூட தான் முன்பு நிராகரித்தது தவறு என்று இப்போது தான் அவருக்கு புரிந்தது. இருந்தாலும் என்ன பயன்? எல்லாம் முடிந்து போயிற்றே!

ராமையா மாதிரி தான் பலரும் ஆசைப்படுகிறார்கள். எதற்கோ குறி வைத்து, கடைசியில் எதையோ அடித்து சொந்தமாக்கிக் கொள்கிறார்கள்.


இன்னும் சிலர் இருக்கிறார்கள். ஜாதகத்தில் ஒன்பது பொருத்தம் இருந்தால் தான் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள். இல்லையென்றால் அடுத்த வரனுக்கு தாவி விடுகிறார்கள். இப்படி ஜாதகம் பார்த்து நல்ல வரன்களை எல்லாம் இழந்து, கடைசியில் ஏதோ ஒரு வரனுக்கு ஜாதகம் பொருத்தம் இருக்கிறது என்று கூறி கட்டி வைத்து விடுகிறார்கள். அப்படி திருமணம் செய்து வைத்து சீரழிந்த குடும்பங்களும் இருக்கத் தான் செய்கின்றன.

இன்று இன்டர்நெட் வழியாக இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே வரனை தேடினாலும், அங்கேயும், ஜாதக பொருத்தம் இருக்கிறதா? என்று கேட்கக்கூடிய நிலையில் தான் இன்றைய சமுதாயம் இருந்து கொண்டிருக்கிறது.

வாழ்க்கையில் நம்மதி வேண்டும் என்றால், துணையை தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் பார்க்க வேண்டியது ஜாதகப் பொருத்தம் அல்ல மனப்பொருத்தம் தான். இதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

* உங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ வரன் தேடும்போது, அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் எந்த மாதிரியான துணையை விரும்புகிறார்கள் என்பதை மனம் விட்டு கேளுங்கள். மகள் என்றால் ஒரு தாய் கேட்கட்டும். அல்லது தோழியரோ, சகோதரியோ கேட்கட்டும். மகன் என்றால் தந்தையோ அல்லது மிகவும் நெருங்கிய உறவினரோ அல்லது சகோதரனோ கேட்கட்டும்.

* ஜாதகம் என்பது நம்பிக்கையின் அடிப்படையிலானது தான். அதை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நல்ல வரன்களை விட்டுவிடாதீர்கள்.

* வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்றால் துணையாக வரக்கூடியவ(ள்)ர் மனம் ஒத்து வாழ வேண்டும். என்ன தான் வசதி, வாய்ப்புகள் இருந்தாலும் மனம் ஒத்துப்போகவில்லை என்றால் அந்த வாழ்க்கைக்கு அர்த்தமே கிடையாது.

* சிலருக்கு ஜாதகத்தில் தோஷம் உள்ளது என்று கூறி, அவர்களது வாழ்க்கையையே நரகமாக்கி விடுகிறார்கள். அவர்கள் என்ன, பாவம் செய்தவர்களா? அவர்களும் அடுத்தவர்கள் போல் ஆசை உள்ளிட்ட எல்லாமுமே கொண்டவர்கள் தானே? அவர்களை ஏன், ஜாதகம் என்கிற பெயரில் வெளியில் தெரியாத கொடுமைகளுக்கு நாமே ஆளாக்க வேண்டும்?

* ஒருவேளை, நீங்கள் ஜாதகத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டிருந்தால், அந்த நம்பிக்கையுடன் மனப்பொருத்தத்தையும் பாருங்கள். அதாவது, திருமணம் செய்து கொள்ளப்போகும் இருவரது விருப்பங்களும் என்ன? அவர்கள் எந்த மாதிரி ஆசைப்படுகிறார்கள்? என்பதையெல்லாம் கேட்டு, அதன்பின் திருமணம் செய்து வையுங்கள்.


-   உண்மையைச் சொல்லப்போனால் வாழ்வின் நம்மதி இருப்பது நம் இல்லத்து சன்னதியில் தான். அதாவது, கணவன்-மனைவியரது மனம் என்னும் சன்னதியில் தான்! அந்த உள்ளத்து சன்னதியை உண்மையாக உணர்ந்து கொண்டால், இந்த பூலோக வாழ்க்கையும் சொர்க்கமே!

முதலிரவு ரகசியங்கள்


முதலிரவு ரகசியங்கள்


ள்ளிரவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரம். விருந்தினர்கள் எல்லாம் உண்ட களைப்பில் தூக்கத்தில் பெரும்பாலும் தொலைந்திருக்க, நெருங்கிய தோழியர் ஓரிருவர் சூழ்ந்துவர, வெட்கத்தில் இன்னும் அழகாகி தலைகுனிந்து வருகிறாள் அந்த அழகான இளம்பெண். கையில், ஒரு சொம்பை வைத்திருக்கிறாள். அதற்குள் சுண்டக் காய்ச்சிய பால் இருக்கிறது. நடக்கும் வேகத்தில் அது சிந்தாமல் இருக்க அதை ஒரே ஒரு டம்ளரால் தலைகீழாக கவிழ்த்து மூடி வைத்திருக்கிறாள்.


அந்த அறையை நெருங்கியதும், முழுமையாக அல்லாமல் ஓரளவே விலக்கப்படுகிறது கதவு. அதற்குள் வெட்கத்தில் மலர்ந்த இளம்பெண் மட்டுமே நுழைய தயாராகிறாள். உடன் வந்த தோழியர் அவளது காதில் ஏதேதோ கிசுகிசுக்க, அவள் இன்னும் அதிகமாக வெட்கப்பட்டுக்கொண்டே அறைக்குள் செல்கிறாள். கதவை தாளிட்டுக் கொள்கிறாள்.

அறைக்குள் அலங்கரிக்கப்பட்ட அழகான படுக்கை. அங்கே, இரவில் பால் பாத்திரத்தை தேடும் பூனையின் கால்கள் போன்று மெதுவாக நகருகிறது அவளது சிவப்பு பாதங்கள்.

தனக்கு உரியவரை நெருங்கியதும், கையில் இருந்த பாலை அருகில் வைக்கிறாள். அடுத்ததாக, தனக்குரியவரது காலில் விழுந்து வணங்குகிறாள். அவரோ, அவளது சிலிர்த்த தோள்களை இரு கரங்களால் பற்றி தூக்குகிறார்.

படுக்கையில் இருவரும் அமர்கின்றனர். இருவருக்கும் இடையே சிறிய இடைவெளி மட்டுமே இருக்கிறது. சிறிது நேரத்தில் அந்த இடைவெளி காணாமல் போகிறது. நெருங்கி அமர்கிறார்கள். ஒருவரையருவர் அணைக்கிறார்கள். அங்கே புதிய உயிரின் தேடலை ஆரம்பிக்கிறார்கள்.

- இதுதான் நம் தமிழ் சினிமாக்களில் இதுவரை காண்பிக்கப்படும் முதலிரவு அறை காட்சிகள்.

ஆனால், நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது?

நிச்சயமாக சினிமாவைப் போன்று இல்லைதான்!


ஏற்கனவே பார்த்து, பழகி, காதலித்து, அதன்பின் திருமணம் செய்து கொண்டிருந்தால் முதலிரவில் பெரும்பாலும் பதற்றம் இருக்காது. ஆனால், முதன் முதலாக அதில் சந்தித்துக் கொள்பவர்கள் எப்படி படபடத்துப் போவார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

அந்த இனிப்பான முதலிரவுக்கு சில இனிப்பான டிப்ஸ் :

* முதலிரவில் உடல்கள் மட்டும் பின்னிப்பிணைவதில்லை. உள்ளங்களும் பின்னிப்பிணைகின்றன. அங்கே சந்திக்கும் இரு உள்ளங்களும் தங்களை முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அவர்களது மனமும் "உறவு"க்கு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கே காமன் வென்று காட்ட முடியும். காமசூத்ரா எழுதிய வாஸ்த்யாயனார் கூட திருமணம் ஆன 3 நாட்களுக்கு பிறகு செக்சில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார். அதனால், முதலிரவு அன்றே முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று யாரும் முயற்சிக்க வேண்டாம். காமத்தில் உடனே வெல்வதைவிட மெல்ல மெல்ல வெல்வதில்தான் சுகம் அதிகம் இருக்கிறது.


* திருமணத்தன்று மணமக்கள் இருவரும் பதற்றத்தோடு இருப்பார்கள். மேலும், உடல் சோர்வும் அதிகமாக இருக்கும். பதற்றத்திலும், சந்தோஷத்திலும் சரியாக சாப்பிட்டுக்கூட இருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், உறவினர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டப்போய், மணமக்கள் சாப்பிட்டார்களா? இல்லையா? என்பதை கவனிக்காமல் கோட்டை விடும் பெற்றோரும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலிரவுக்கு தயாராகுவது என்பது கடினமான ஒன்றுதான். அதனால், அதை ஓரிரு நாட்களுக்கு தள்ளிப்போடுவதில் தவறே இல்லை. அதேநேரம், உங்கள் உடலும், உள்ளமும் ஆர்வமாக இருந்தால் நிச்சயம் உறவு வைத்துக்கொள்ளலாம். அதில் தவறில்லை.


* சில சினிமாக்களில் முதலிரவு அறையில் பழைய காதல்களை புரட்டிப் பார்ப்பதாக காட்டுகிறார்கள். அதை ரியல் லைப்பில் புரட்டிப் பார்ப்பது தவறு. நீங்கள் முன்பு காதலித்து இருந்தாலும் கூட, அதுபற்றி துணையே கேட்டாலும் வாய்திறக்கக்கூடாது. புதுமணத் தம்பதியர் முதன் முதலில் ஒன்றாக இருப்பது முதலிரவு அறையில்தான். அன்றைய தினம் என்ன பேசுகிறீர்களோ, அது வாழ்க்கையின் கடைசி வரைக்கும் நினைவிருக்கும் என்பதால் பேச்சில் கவனம், கட்டுப்பாடு தேவை.

* முதலிரவு அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முதலிரவு இப்படித்தான் இருக்கும் என்று உங்கள் நண்பர் சொன்னால், அப்படித்தான் நமது முதலிரவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.



* திருமணத்திற்கு விலை உயர்ந்த நகைகள், பட்டுப்புடவைகள் வாங்குவதில் கவனம் செலுத்தும் நீங்கள் உள்ளாடை வாங்கும் விஷயத்திலும் அந்த கவனத்தை செலுத்தலாம். இப்போது பல்வேறு டிசைன்களின் உள்ளாடைகள் விற்பனைக்கு வருகின்றன. உங்கள் அழகை&கவர்ச்சியை அதிகரித்துக் காட்டுவதற்கு என்றே பிரத்யேகமான உள்ளாடைகளும் உள்ளன. முதலிரவில் இந்த மாதிரியான உள்ளாடைகள் உங்கள் அழகை அதிகரித்துக் காட்டுவதோடு "மூடை"யும் அதிகரிக்கும்.


* முதலிரவு அறையில்தான் முதன் முதலாக துணையை பிறந்த கோலத்தில் பார்க்க முடியும். சிலர், ஏதேதோ படங்களை பார்த்து, துணையையும் அதுபோன்று எதிர்பார்க்கலாம். அது தவறான கண்ணோட்டம். "நான் இவ்வளவு எதிர்பார்த்தேன். ஆனால், இப்படி ஆகிவிட்டதே. இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்பது போன்ற எண்ணங்களை மூட்டைக்கட்டி தூர எறிந்துவிடுங்கள். உண்மையைச் சொல்லப்போனால், அந்த மாதிரியான எண்ணங்களே வரக்கூடாது. மீறி வந்தால் செக்சில் இனிமையை காண முடியாது. அங்கே வெறுமைதான் மிஞ்சும்.


* குழந்தை பற்றிய விஷயத்தை முதலிரவிலேயோ அல்லது அதற்கு முன்போ முடிவெடுத்து விடுங்கள். குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்றால் பாதுகாப்பான கருத்தடை சாதனைகளை பயன்படுத்தி உறவில் ஈடுபடுங்கள். குழந்தை உடனே வேண்டும் என்பவர்கள், குழந்தை உடனே பிறக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உறவு கொள்ள வேண்டாம். காரணம், அந்த எண்ணமே உங்களுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்திவிடலாம். உங்கள் மகிழ்ச்சிக்காகவும், துணையின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே உறவை வைத்திடுங்கள். அப்படியென்றால், கூடிய விரைவில் உங்கள் மனைவி கர்ப்பமாகி, அடுத்த 10-வது மாதத்தில் உங்கள் வீட்டில் குவா... குவா.... சத்தம் கேட்கலாம்.


* சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்பார்கள். இதனால்தான் என்னவோ, பெற்றோர்கள் பலர் அதுபற்றி தங்களது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க மறந்து விடுகிறார்கள். திருமணத்திற்கு காத்திருக்கும் ஒவ்வொருவரும் அதுபற்றி குறைந்தபட்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்காக, டாக்டர்கள் பரிந்துரைத்த செக்ஸ் தொடர்பான ஆபாசம் இல்லாத புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஆங்காங்கே பதுக்கி வைத்து விற்கப்படும் மஞ்சள் புத்தகத்தை மட்டும் வாங்கி படித்து விடாதீர்கள். மீறினால், உங்கள் செக்ஸ் கண்ணோட்டமே மாறிப்போய்விடும்.


* இப்போதெல்லாம், திருமணம் முடிவாகிவிட்டாலே தம்பதியராகப் போவோரை செல்போனில் மணிக்கணக்கில் கடலைபோட ஸாரி... பேச அனுமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் செக்ஸ் உள்ளிட்ட எல்லா விஷயங்களையுமே அவர்கள் பரிமாறிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அந்த சூழ்நிலையில், நீங்கள் செக்ஸ் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்வதில் நன்மையும் இருக்கிறது; அதேநேரம், தீமையும் இருக்கிறது. நன்மை என்றால், செக்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள் தீருகின்றன. தீமை என்றால், சந்தேகம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.


* முதலிரவிலேயே திருப்தி காண்பது பெரும்பாலும் முடியாத காரியம். சிலர் பதட்டத்தில் உடனே சோர்ந்து போகலாம். அப்படி சோர்ந்து போனால், "அய்யோ... நம்மால் முடியாதோ?" என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். அப்படி எண்ணிவிட்டால் செக்ஸ் என்ற சொல்லே உங்களுக்கு வெறுப்பை தந்துவிடும். நம்மால் முடியும் என்று நம்புகள். அப்படி நம்பினால் உங்களால் நிச்சயம் முடியும்.


மொத்தத்தில் செக்ஸ் என்பது அற்புதமான, அருமையான மருந்து. இந்த மருந்து மட்டும், உடலுக்கும், மனதுக்கும் சரியாக கிடைத்து வந்தால் மனநெருக்கடி கிட்ட வரவே வராது. மனநெருக்கடி இல்லையென்றால் நோய்கள் வர யோசிக்கும். நோய்கள் வராவிட்டால் நலமாக வாழலாம்தானே?
இப்படிப்பட்ட சிறப்புக்குரிய செக்ஸ் முதன் முதலாக அரங்கேறுவது முதலிரவில்தான். மேற்படி டிப்ஸ்களை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் அந்த இனிய இரவில் நீங்கள் நிச்சயம் வென்று காட்டலாம்.

சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்


நீங்கள் பஸ்சிலோ, ரெயிலிலோ பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அலுவலகம் செல்பவர் என்றால் குறித்த நேரத்திற்குள் அலுவலகம் சென்றுவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். வரன் பார்க்க செல்பவர் என்றால் நல்ல நேரம் தவறிவிடக்கூடாதே; இந்த நேரம் பார்த்து, டிரைவர் இப்படி உருட்டுறாரே என்று மனதிற்குள் திட்டிக் கொண்டிருப்பீர்கள்.

இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்.
சரி... உங்களை விடுங்கள். ஒரு பிச்சைக்காரரை வைத்துக்கொள்வோம். காலை சாப்பாட்டிற்கு 20 ரூபாய் தேறி விடாதா என்று விடாமுயற்சியோடு (?!) கத்தி பிச்சை கேட்டுக் கொண்டிருப்பார்.

இப்படி ஒவ்வொருவரது எண்ண ஓட்டங்களும் சிதறி ஓடிக்கொண்டிருக்கும்போது உங்களால் எப்படி வாய் நிறைய சிரிக்க முடியும்?
நீங்கள் பயணம் செய்யும் அதே பஸ்சில் அல்லது ரெயிலில் பெற்றோருடன் பயணித்துக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளை பாருங்கள். வாய் நிறைய சிரித்துக்கொண்டிருப்பார்கள். பொன்னகை இருக்கிறதோ இல்லையோ, முகம் நிறைய புன்னகை அப்பியிருக்கும்.
அதேநேரம், உங்களிடம் மட்டும் அந்த சிரிப்பு, உற்சாகம் தொலைந்துபோய் இருப்பது ஏன்?

எல்லோரும் சிந்திக்க வேண்டிய கேள்வி இது.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்
- இது பழமொழி!

இது எல்லோருக்கும் தெரிந்து என்ன பயன்? சிரித்து மகிழ்ந்தால் தானே அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும்.

ராமையாவுக்கும் இந்த பழமொழி தெரியும். அதனால் தான், தனக்கு காய்ச்சல் வந்த அன்றைய தினம் அந்த திடீர் முடிவுக்கு வந்தார்.

அலுவலகத்திற்கு செல்ல காலையில் ரெயிலில் ஏறிய அவர், அலுவலகம் செல்வது வரை சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தனக்குள் தீர்க்கமான முடிவை எடுத்துக் கொண்டார்.

பிளாட்பாரத்தில் ரெயில் வந்து நின்றதும் வேகமாக ஓடிச்சென்று ஏறிக்கொண்டார். ஏதாவது இருக்கை இருக்கிறதா? என்று பார்வையை ஓடவிட்டவர், ஜன்னலோரம் காலியாக இருந்த இருக்கையில் அரக்கபறக்க ஓடி இடம்பிடித்து அமர்ந்து கொண்டார்.

இன் பண்ணியிருந்த சர்ட்டை சரி செய்துவிட்டு நேராக பார்த்தார். 75 வயதை தொட்ட மூதாட்டி ஒருவர் இருந்தார். வாயில் ஒரு பல் கூட இல்லை.
வாய் நிறைய சிரிக்க வேண்டும் என்று நாம் முடிவெடுத்த நேரம், இப்படிப்பட்ட பல் விழுந்த கிழவியா நம் முன் இருக்க வேண்டும்? எல்லாம் உன் நேரம்டா! என்று தன்னையே திட்டிக் கொண்டார்.

கிழவிக்கு பல் விழுந்தால் என்ன? லேசாக சிரித்து தொலைப்போமே என்று வாயை திறந்தார். பதிலுக்கு மூதாட்டியும் தனது பொக்கை வாயை அசைக்க, ஒருகனம் ஆடியேப் போய்விட்டார் ராமையா.

மூதாட்டியிடம் தான் சிரிக்க முடியாது. வேறு யாரையாவது பார்த்து சிரிப்போமே என்று இடது பக்கம் திரும்பினார். அங்கு இருந்தவரை பார்த்ததும் தான் தாமதம்; ராமையாவின் இதயத்தின் லப்-டப் வேகம் கொஞ்சம் எகிறியது தான் மிச்சம்.

மறைந்த மாயாவி வீரப்பன் ஸ்டைலில் மீசையை முறுக்கிக்கொண்டு அங்கே அமர்ந்திருந்த போலீஸ்காரர் தான் அதற்கு காரணம்.

என்னடா வம்பாப் போச்சு! வாய் நிறைய சிரிக்க வேண்டும் என்று நாம் முடிவெடுக்கும்போது தானா இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? என்று தன்னையே நொந்து கொண்டார். உட்கார்ந்து இருக்கிற இடத்தில் தான் ஒன்றும் சரியில்லை. பக்கத்திலாவது நோட்டமிடுவோமே என்று பார்வையை சற்று திருப்பினார்.


கல்லூரிக்கு செல்கிறாரா? அல்லது பீச்சுக்கு செல்கிறாரா? என்ற சந்தேகத்தை கிளப்பும் வகையில் டைட் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் டீ-சர்ட் அணிந்திருந்த இளம்பெண் ஒருத்தி, இருக்க இடம் கிடைக்காததால் நின்று கொண்டிருந்தாள். வெளியே வேகமாக வீசும் காற்றில் பறந்து முகத்திற்கு முன்பு விழுந்து கொண்டிருந்த முடியை வேண்டா வெறுப்பாக சரி செய்து கொண்டிருந்தாள்.
இவள் தான் நமக்கு லாயக்கு என்று அடுத்தக்கட்ட முடிவு எடுத்த ராமையா, வடிவேலு ஸ்டைலில் உதட்டை லேசாக அங்கும் இங்கும் அசைத்துக்கொண்டு ஒரு சின்ன ஸ்மையிலுடன் அவளை பார்த்து சிரிப்பை உதிர்த்தார்.
சிரித்தது தான் தாமதம், காலில் அணிந்திருந்த ஹை&ஹீல்ஸ் செருப்பை கழற்ற குனிந்துவிட்டாள் அவள்.

இன்னிக்கு நமக்கு நேரம் சரியில்லை என்று முடிவெடுத்து, தனது சிரிக்கும் திட்டத்தை காலவரையற்று ஒத்தி வைத்தார் ராமையா.

வாய் நிறைய சிரிக்க வேண்டும் என்று ராமையா முடிவெடுத்தது சரி தான். தனது வயது 40-ஐ தொட்டுவிட்டது என்பதை மறந்து அவர், சம்பந்தம் இல்லாதவர்களிடம், சம்பந்தமே இல்லாத முறையில் சிரிப்பை வெளிப்படுத்த முயன்றது தான் தவறாகிவிட்டது.

சிரிப்பை எப்படி, எப்போது, எங்கே வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கு எழுதப்படாத பல விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகளை மீறினால் ராமையா கதி தான் நமக்கும் ஏற்படும்.

நீங்கள் எப்போதெல்லாம் வாய் நிறைய சிரிப்பை வெளிப்படுத்தலாம்?


* குழந்தைகளிடம் எந்த வயதினரும் சிரிப்பை வெளிப்படுத்தலாம். நீங்கள் அந்த குழந்தைகளிடம் சின்னதாக சிரித்தாலே அவர்கள் பெரியதாய் சிரிப்பார்கள்.
* இளம்வயதினர் எதிர்பாலினரிடம் சிரிக்கும்போது பார்த்து சிரிக்க வேண்டும். நீங்கள் ஒருவரை பார்த்த மாத்திரத்திலேயே, அவர் நம்மை ஆமோதிக்கிறாரா இல்லையா என்பதை ஓரளவிற்கு புரிந்து கொள்ளலாம். அதன்படி லேசாக புன்னகையை வெளிப்படுத்துவதில் தவறில்லை. அதற்காக, அடுத்தவன் காதலியிடம் போய் சிரிப்பது போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டுபோய்விடும்.

* வயதான முதியவர்கள் உங்கள் அருகில் இருக்கிறார்களா? ஆதரவான பார்வையோடு மிக லேசாக பற்கள் தெரியும்படி சிரிப்பை வெளிப்படுத்துங்கள். அந்த வயதிலும், சிரிக்க முடியாவிட்டாலும்கூட உங்களது அந்த ஆதரவான புன்னகைக்காக சிரிப்பார்கள்.

* உங்கள் எதிரில் இருப்பவர்கள் நோய், நொடியால் பாதிக்கப்பட்டவர்கள் எனில் கண்டிப்பாக சிரித்து மட்டும் விடாதீர்கள். அப்போது கவலைப் பார்வையை அவர்கள் மீது வீசுவதை தவிர்த்து ஆறுதலான பார்வையை வீசுங்கள். அவர்களும் தங்கள் கவலையை மறந்து நிச்சயம் லேசான புன்னகையை வெளிப்படுத்துவார்கள்.

* தாலி கட்டிய மனைவியிடம் சிரிப்பை வெளிப்படுத்தும்போதும்கூட நேரம், காலம் பார்த்து தான் வெளிப்படுத்த வேண்டும். அவர் கஷ்டப்பட்டு வேலை செய்யும்போது, அய்யோ... அய்யோ... என்று வடிவேலு மாதிரி சிரித்தால் அன்றைய தினம் சாப்பாட்டில் உப்பு அதிகமாகிவிடும், இல்லையென்றால் காரம் அதிகமாகிவிடும்.

* பணிபுரியும் இடத்திலும் புன்னகையோடு இருங்கள். உங்கள் பற்றிய மேலான எண்ணங்கள் அனைவருக்கும் நிச்சயம் ஏற்படும்.


* பெண் ஒருத்தி அதிகம் சிரிப்பது வீட்டிற்கு ஆகாது என்ற கருத்து இன்றும் உலா வருகிறது. அதாவது, ஒரு பெண் ஆனவள் மற்றொரு ஆணிடம் வாய்விட்டு சிரிக்கும்போது அவள் மீதான கீழான எண்ணங்கள் தான் அதிகரிக்கும் என்பதால் அன்று அப்படி சொல்லி வைத்தார்கள். இந்த வழக்கு சரியா? தவறா? என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், பெண்கள் அமைதியாக சிரிப்பது நல்லது தான். வாய்விட்டு சிரிக்கும் பெண்ணைக் காட்டிலும் மிதமாக சிரிக்கும் பெண்கள் இன்னும் கொஞ்சம் அழகாகவே தெரிவார்கள்.

மொத்தத்தில் சிரிப்பு என்பது மனிதகுலத்திற்கு கிடைத்த ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். சிந்திக்க தெரிந்த சமூக விலங்கான மனிதனால் மட்டுமே சிரிக்க முடியும். அந்த சிரிப்பை மிஸ் பண்ணினால் வாழ்க்கையில் பல விஷயங்களையும் மிஸ் பண்ண வேண்டியிருக்கும்.

ஆகவே உஷார்..! உஷார்..!

செக்சும் அவசியம் தான்



செக்ஸின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அது ஆதாம்-ஏவாள் காலத்திலேயே துவங்கிவிட்டது. இன்று, உலகெங்கும் உயிர்கள் வியாபித்து பரவிக் கிடக்கின்றன என்றால், அதற்கு காரணம் இந்த செக்ஸ் தான்.

இந்த செக்ஸை பூ மாதிரி கையாள வேண்டும். மலர்ந்த மல்லிகைப் பூக்களை அலுங்காமல் குலுங்காமல் தொடுத்து, தலையில் பெண்கள் சூடியிருந்தால் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அந்த பூக்களின் மீது வன்முறையை பிரயோகிப்பதுபோல் கசக்கினால் அதனால் எந்த பயனுமே கிடைக்காது.

அடிப்படையில், செக்சும் அப்படித் தான். கணவன்-மனைவியர் பரஸ்பரம் தங்களை புரிந்துகொண்டு அந்த இன்பத் தேடலில் மென்மையுடன் இறங்கினால் தான் இருவரும் அங்கே வெற்றிக்கொடி நாட்ட முடியும். வன்முறைக்கு அங்கே சற்று இடம் கொடுத்தாலும்கூட முழு திருப்தி என்பது இல்லாமல் போய்விடும்.

ஆத்ம ரீதியாக கணவன்-மனைவியர் இணையும்போது தான் உண்மையான சுகத்தை அனுபவிக்க முடிகிறது. நாங்கள் சந்தோஷமாகத் தான் இருக்கிறோம் என்று 100 சதவீதம் திருப்தி கொள்ள முடிகிறது.

ஆனால், இன்றைய தம்பதியரில் பலருக்கு செக்ஸ் பற்றிய அறிவு போதுமானதாக இல்லை. சிலர், அதை குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கடமைக்காகவே செய்கிறார்கள். இப்படி இயந்திரத்தனமாக செயல்படுவதில் எந்த பயனுமே இல்லை.


உங்களை உண்மையாக-முழுமையாக புரிந்துகொள்ளுங்கள். அதன்பின், செக்ஸ் என்னும் இன்பக் கடலில் நீந்துங்கள். அப்போதுதான், உடலும், மனமும் சேர்ந்து திருப்திக் கொள்ளும்.

சில தம்பதியர் இருக்கிறார்கள். வாரம் இரு முறையோ அல்லது மூன்று முறையோ உடல் தேவைக்காக மட்டும் செக்ஸ் வைத்துக்கொள்கின்றனர். அந்த குறுகிய வட்டத்திற்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கின்றனர்.
இப்படி அவர்களது உறவு நகரும்போது, தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் டென்ஷன் ஏற்பட்டு பிரச்சினைகளின் பட்டியல் தான் நீண்டுகொண்டே போகிறது. அதன் உச்சக்கட்டம் தான் விவாகரத்து.


நகரவாசியான ராமையாவுக்கு திருமணமாகி ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. செக்ஸை, மனைவியிடம் திருப்தியாக அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். யாரிடம்போய் இதுபற்றி கேட்பது என்று தயங்கினார். மனைவி பத்தாவது வரையே படித்த கிராமத்துப் பெண் என்பதால், அவளிடமும் அவரால் மனம் விட்டு பேசமுடியவில்லை. மனதிற்குள் பலவற்றையும் போட்டு குழப்பிக் கொண்டார்.

அவரது இந்த குழப்பத்தை தெரிந்துகொண்ட அவரது நண்பர் ஒருவர், பலான படங்களை இருவரும் போட்டுப்பார்த்தால் திருப்தியாக அனுபவிக்கலாம் என்று யோசனை சொன்னார். அங்கே இங்கே என்று அலைந்து, படாதபாடுபட்டு அந்த படத்தை வாங்கி வந்துவிட்டார்.

ஆனால், மனைவியிடம் அதுபற்றி சொல்ல பயம். இவள் கிராமத்துப்பெண் ஆயிற்றே! எப்படி நினைக்கப்போகிறாளோ என்று பயந்தபடியே அவளிடம் பேச முயன்றார். அப்போது, அவருக்கு திடீரென்று ஒரு சந்தேகம். ஒருவேளை நாம் அதுபற்றி சொல்லப்போய், இவள் தவறாக நினைத்துவிட்டால்... என்று யோசித்தார்.

உடனே அந்த முடிவுக்கு வந்தார். டி.வி.டி.யில் என்ன இருக்கிறது என்று சொல்லாமலேயே போட்டு விடுவோம் என்று கணக்குப்போட்டு, பிளேயரில் அதை போட்டு ஓட விட்டுவிட்டார். மனைவியையும் பக்கத்தில் அமர வைத்துக்கொண்டார்.

டி.வி.யில் எதிர்பாராத காட்சிகள்வர அந்த பெண் நடுங்கியே போய்விட்டார். அவளது நடுக்கத்தை பார்த்த ராமையா டி.வி.யை ஆப் செய்து, அவளை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

இப்படி, ராமையா மாதிரி தான் பல ஆண்கள் செயல்படுகின்றனர். மனைவியின் விருப்பம்-ஆசை என்னவென்று தெரிந்துகொள்ளாமல், அவர்கள் தேவையை மட்டுமே நிறைவேற்றிக்கொள்வதில் குறியாக இருக்கிறார்கள்.
செக்ஸை பொருத்தவரை ஒரு ஆணால் 2 நிமிடத்திற்குள்ளாகவே உச்சக்கட்டத்தை எட்டிவிடலாம். ஆனால் பெண் அப்படி அல்ல. அவள் உச்சக்கட்டத்தை நெருங்க குறைந்தது 12 நிமிடங்கள் ஆகும் என்று கணக்கு சொல்கிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்டுகள்.

உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது, தங்கள் தேவையை மட்டும் மனைவியிடம் கணவன் ஆனவன் நிறைவேற்றிக்கொள்வது என்பது, அந்த மனைவியானவளின் ஆசைகளை - விருப்பங்களை - எதிர்பார்ப்புகளை புறக்கணிக்கும் செயல் என்றே கூற வேண்டும்.

உண்மையைச் சொல்லப்போனால், சரியான செக்சும், சரியான அன்பும் தான் வாழ்க்கை. ஒரு தம்பதியர் இடையே செக்ஸ் உறவு திருப்தியாக இருக்கும்போது தான், அங்கே மகிழ்ச்சி என்ற ஆனந்த பூ மலர்கிறது. அன்பு இருந்தால் தான் செக்ஸ் உறவு திருப்தியாக அமையும்.

இரு கைககள் சேர்ந்து தட்டினால் தான் ஓசை வரும். அதுபோல், கணவன்&மனைவி இருவரும் அன்பால் பிணைந்து, உடலால் இணைந்தால் தான் அங்கே செக்ஸில் சரியான திருப்தி கிடைக்கும்.

ஒருவரது மனசுக்கு பிடித்த விஷயம் என்பதுபோல், ஒருவரது உடலுக்கு படித்த விஷயங்கள் என்றும் இருக்கிறது. அந்த விஷயங்களை தம்பதியர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதை கண்டுபிடித்து துணையை ஆனந்தத்தின் எல்லைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஒருவரது உடலுக்கு பிடித்தவை என்பதை எப்படி தெரிந்துகொள்வது?


* செக்ஸ் வைத்துக்கொள்வதற்கு முன்புள்ள நேரத்தில் கணவன்-மனைவி இருவரும் வீட்டில் அல்லது இருவருக்குள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தூக்கி எறிந்துவிட வேண்டும். அப்போது தான் உங்கள் உடலின் விருப்பங்களை தெரிந்துகொள்ள முடியும்.

* தனிமையில் இருவரும் மனம்விட்டு பேசுங்கள். கணவனைவிட மனைவி அதிகம் படித்திருந்தாலும், அதிக சம்பளம் வாங்குபவராக இருந்தாலும், அதையெல்லாம் மறந்து, அவள் எனக்காக, நான் அவளுக்காக என்ற எண்ண ஓட்டத்தில் பேசுங்கள். நிறைய பேசுங்கள். அப்போது, ஒருவரையருவர் நன்றாக புரிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.

* மனைவியின் உடலில் எங்கே, எப்படி தொடும்போது அவளுக்கு இன்பம் கிடைக்கிறது? எப்படி பேசும்போது அவளிடம் இன்ப கிளர்ச்சி ஏற்படுகிறது? எத்த மாதிரி முத்தம் கொடுக்கும்போது இவள் இன்பத்தில் திக்குமுக்காடுகிறாள்? என்பதை ஒரு கணவன் அறிந்திருப்பது அவசியம். அதுபற்றி மனைவியிடம் அன்பாக கருத்து கேட்பது நல்லது தான்.

* எல்லா ஆண், பெண்களுக்கும் இன்பம் தரக்கூடிய உடல் பகுதிகள் ஒரே மாதிரியானவை அல்ல. அதனால், உடலின் சுக மையங்கள் எவை என்பதை இருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதுபற்றி ஒருவர் மற்றொருவரிடம் கேட்டு தெரிந்துகொள்வதிலும் தப்பில்லை தான்.

* செக்சில் ஒருவரையருவர் வருடுவது என்பது ஒரு முக்கியமான செயல். காதுகளை பின்பற்றி வருடுவதும், முத்தம் கொடுப்பதும் பெண்களுக்கு அதிக சுகம் தரும் என்பது ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்து இருக்கிறது. ஆனால், சில பெண்கள் அதை தவிர்க்கவும் செய்கிறார்கள். மனம் விட்டு பேசும்போது தான் அதுபோன்ற குறைபாடுகளை தெரிந்து, போக்கிக்கொள்ள முடியும்.


* கணவன்-மனைவியர் இடையே அதிக பிரச்சினை ஏற்பட காரணமாக கூறப்படும் புகார்களில் முதலிடம் பெறுவது செக்ஸ் அதிருப்தி தான். துணையிடம் செக்ஸை முழுமையாக அனுபவிக்க முடியாதபோது, அதுவே பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணமாகிவிடுகிறது. அவளுக்காகத் தான் நான் பிறந்திருக்கிறேன், எனக்காகத் தான் அவள் பிறந்திருக்கிறாள் என்பதுபோல் பேசுவது கணவன்-மனைவியர் இடையே பிரச்சினைகளை தவிர்க்கும்.

* எந்தவொரு செயலையும் திரும்பத்திரும்ப செய்யும்போது போரடித்துவிடும். செக்சும் அதுபோன்றது தான்! செக்ஸ் வைத்துக்கொள்ளும் நேரம், இடம், சூழ்நிலைகளை மாற்றிக்கொள்வதும், செக்ஸ் நடவடிக்கைகளில் புதுமைகளை புகுத்துவதும் ஆசைகளை கணவன்-மனைவியர் இடையே அதிகரிக்கச் செய்யும். இருட்டு, குறைந்த வெளிச்சம், வெளிச்சம் என்று, உறவு வைத்துக்கொள்ளும் அறையின் சூழ்நிலைகளையும் மாற்றிக் கொள்ளலாம்.

* செக்ஸின் ஆரம்ப நிலை கட்டிப்பிடித்தல் தான். ஒரு தம்பதியர் அடிக்கடி கட்டிப்பிடித்து முத்தங்களை பரிமாறிக்கொண்டால் அவர்களது சருமம் பளபளப்பாகும், முடி நன்கு வளரும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வேலையின் காரணமாக மனஅழுத்தத்தில் இருப்பவர்கள், திருப்தியாக செக்ஸ் வைத்துக்கொள்வதன் மூலம் அந்த பாதிப்பில் இருந்து இயல்பான நிலைக்கும் திரும்புவதும் ஆராய்ச்சியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில், செக்ஸ் என்பது இறைவன் கொடுத்த வரம். அந்த ஆரோக்கியமான விஷயத்தை ஆபாசமாக நோக்காமல் பார்த்தால் நிச்சயம் துணையிடம் மனம்விட்டு பேசலாம், திருப்தியாக உறவு வைத்துக்கொள்ளலாம், மகிழ்ச்சியாகவும் வாழலாம்.

அன்புள்ள காதலிக்கு...


"காதலுக்கு கண் இல்லை என்று யார் சொன்னது? அப்படியே கண் இல்லை என்றால் அழகான உன்னை நான் எப்படி கண்டிருப்பேன்? நாம் அழகான காதலை எப்படி மற்றவர்கள் தெரிந்திருப்பார்கள்?

முதன் முதலாக நம் இருவரது கண்களும் மோதி விபத்துக்குள்ளானபோது, அதை படம் பிடித்ததும் அதே கண்கள்தானே? ஏதோவென்று வாழ்ந்து கொண்டிருந்த என்னை அழகானவன் ஆக்கியதும், எனக்கென்று புது சொந்தத்தை அடையாளம் காண்பித்ததும் நம் காதல்தானே?"

- இன்றைய காதலர்கள் பலர், தங்கள் காதல் கடிதத்தை இப்படித்தான் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மனதில் புத்துணர்ச்சி இருந்தால் ஆரோக்கியமான சிந்தனை ஒருவருக்கு தானாக வந்துவிடும். நல்ல புத்தகங்களுக்கு மட்டுமல்ல, நல்ல காதலுக்கும் ஆரோக்கியமான சிந்தனையைத் தரும் பவர் இருக்கிறது.

இதனால்தான் காதலில் விழுந்தவர்கள், தேனில் விழுந்துவிட்ட தேன்வண்டைப்போல் இறுதிவரை போராடிப் பார்க்கிறார்கள்.
கடிதங்களின் அருமை காதலர்களுக்குத்தான் தெரியும். அதுவும், முதன் முதலாக எழுதிய காதல் கடிதத்திற்கும், முதன் முதலாக காதலனோ, காதலியோ தந்த கடிதத்திற்கும் தனி பவரே இருக்கிறது.

காதலில் தோற்றுப்போனவர்களும்கூட, முன்னாள் காதலி தனக்கு எழுதிய கடிதத்தை, பரிசாக தந்த பொருட்களை யாருக்கும் தெரியாமல் பத்திரப்படுத்தி வைத்திருப்பதை இன்றும் காண முடிகிறது. எப்பொழுதாவது அந்த முன்னாள் காதலியின் நினைவு வரும்போது, தங்களது காதல் வாழ்க்கையை மனதிற்குள் புரட்டிப் பார்க்கிறார்கள். கூடவே, நிறம் மாறிப்போன அந்த பழைய காதல் கடிதத்தையும் படித்து, முடிவுரை எழுதப்பட்ட அந்த காதலை நினைத்து சிலிர்க்கிறார்கள்.


காதலில் விழுந்துவிட்டால் கவிதைகளும் பிறந்து விடுகின்றன. காரணம், மகிழ்ச்சியின் உச்சத்தில் திக்கு முக்காடும் மனம்தான்.

"பன்னீரின் மனமும் தோற்றது
ஜவ்வாதும் வெறுப்பேற்றியது
அருகில் என்னவள் இருந்ததால்..." என்றெல்லாம் சிலிர்ப்பவர்கள், காதலிக்காக கற்பனையை கன்னாபின்னாவென பறக்க விடுகிறார்கள்.

"அந்த ஈயை பார்த்துக்கூட
எனக்கு பொறாமை;
நீ காபி குடித்த டம்ளரை
அது எச்சில்படுத்தியபோது..." என்று கவிதையும் எழுதி பரவசப்படுகிறார்கள்.
அழகான விஷயங்களை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. காதலும் ஒரு அழகான விஷயம்தான்.

முதன் முதலாக ஒரு அழகான பெண்ணைப் பார்த்து பரவசப்படும்போது, அவள் தனக்கு காதலியாக இருந்தால் எப்படி இருக்கும்? என்று கணக்கு போடுகிறார்கள். காதலியாக வருவாளா? வரமாட்டாளா? என்று எண்ணியவளிடம் பேசுகின்ற ஒரு வாய்ப்பு கிடைத்தாலுமே, அவளை காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

என்ன செய்கிறோம் என்பதுகூட அவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது. கெமஸ்ட்ரி புத்தகத்திற்கு பதிலாக பயாலஜி புத்தகத்தை எடுத்துக்கொண்டு வகுப்புக்கு செல்வதும், சாப்பிட்டோமா? சாப்பிடவில்லையா? என்பதுகூட தெரியாமல், ஏன்... அம்மா மெடிக்கலில் வாங்கி வரச்சொன்ன மருந்தையும் கூட மறந்து இன்பமான தவிப்பில் சிக்குகிறார்கள்.  


"நேரமும் தெரியவில்லை;
காலமும் புரியவில்லை;
உன்னை கண்ட நாள் முதல்
இரவும் பகலாகிப் போனதால்..." என்றும் கவிதையும் தீட்டி விடுகிறார்கள்.
காமம் இன்றி காதல் இல்லை. காதல் போதையில் ஆணும், பெண்ணும் முழுமையாக சிக்கிக் கொண்டால் அங்கே காமத்திற்கும் இடம் கிடைத்துவிடுகிறது. தங்களை தீண்டிக்கொள்கிறார்கள்; அதனால், சிலிர்த்துக் கொள்கிறார்கள்.

அப்போதும் அவர்களுக்குள் கவிதை ஊற்றெடுக்கிறது.

"திடீர் விபத்து!
ஆனால்
இன்ப அதிர்ச்சி!
இங்கே மோதியது
நீயும், நானும் அல்லவா?" என்று கண்களால் காதல் கவிதை பேசுகிறார்கள்.
காதலுக்கு காதலி ஓ.கே. சொல்லிவிட்டால், அந்த காதலி மீது இன்னும் அதிகமாக உரிமை கொண்டாடுகிறான் காதலன். அவள் தனக்கு மாத்திரமே என்று உறுதியாக நம்புகிறான். அவளை இன்னொருவன் தவறான நோக்கத்தில் பார்த்துவிட்டால் இவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது. அவனை அடிக்கப் பாய்ந்து விடுகிறான்.

"உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது!" என்று அப்போது லேசாக கோபப்படும் காதலியை சமாதானப்படுத்த வேண்டாமா? அப்போதும் அந்த காதலனுக்குள் கவிதைதான் பிறக்கிறது. அந்த கவிதையிலேயே அவளுக்கு "ஐஸ்" வைக்கிறான்.

"புளுட்டோனியத்தைவிட
உன் பார்வைக்கு பவர் அதிகம்
ஒத்துக் கொள்கிறேன்;
உனது ஒரு பார்வையிலேயே
என் இதயம் நொறுங்கிவிட்டதே..." என்று காதலன் பொய்யாக சொன்னாலும்கூட, தனது கோபத்தை மறந்து சிரித்து விடுகிறாள் காதலி.
எல்லோரும் காதலிக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், காதலனோ, காதலியோ எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. சிலர் ஒருதலையாக காதலிப்பார்கள். ஆனால், காதலை எப்படி வெளிப்படுத்துவது? என்பது தெரியாமல் வானம் பார்த்த பூமி போல் காத்திருப்பார்கள்.

சொன்னால்தான் காதல் என்பார்கள். எதையும் சொன்னால்தான் தெரியும். மனதிற்குள்ளேயே எந்த விஷயத்தையும் போட்டு குழப்புவதால் எந்த பயனும் கிடையாது. காதலும் அப்படித்தான்!

உரியவரிடம் அதை சொன்னால்தான் நல்லது. இல்லையென்றால், சோகம்தான் மிஞ்சும்.

சிலர் ஒருதலையாக காதலிக்கும் காதலி, அவர்களைவிட அந்தஸ்தில், அழகில் உயர்வானவளாக இருக்கலாம். அவள் தனக்கு கிடைக்க மாட்டாள் என்பது உறுதியாக தெரிந்திருந்தும் காதலிப்பார்கள். அவளிடம் ஒரு வார்த்தை பேச இவர்களிடம் ஓராயிரம் தவிப்புகள் இருந்தாலும், அவளது ஓரப்பார்வை ஒன்றுக்காக காத்துக்கிடப்பார்கள்.

அப்போது, அவர்களே கவிதை எழுதி, அவளிடம் கொடுக்காமல் அவர்களே வைத்துக்கொள்வார்கள். அவ்வப்போது அந்த கவிதையை படித்துப் பார்த்து, ஏக்க பெருமூச்சு விட்டுக்கொள்வார்கள்.


"நீ பூமி
நான் சந்திரன்
உன்னையே
சுற்றி சுற்றி வருகிறேன்;
சந்திக்க முடியாது என்று
உறுதியாக தெரிந்தும்...!" என்று தங்களுக்கு தாங்களே ஆறுதல் கவிதை தீட்டிக் கொள்வார்கள்.

விதி விளையாடாத களமே கிடையாது. காதலும் அதற்கு விதிவிலக்கல்ல. சிலநேரங்களில் சூழ்நிலையின் காரணமாக தனது காதலி இன்னொருவனுக்கு மனைவியாகும் சூழ்நிலை ஏற்படலாம். அப்படி இன்னொருவனுக்கு தனது காதலி மனைவியாகிவிட்டால், அந்த காதலன் அனுபவிக்கும் துயரத்திற்கு அளவே இல்லாமல் போய்விடும்.

ஒருசில காதலர்கள், இன்னொருவனுக்கு மாலையிட்ட தனது காதலியை "எங்கிருந்தாலும் வாழ்க" என்று கூலாக வாழ்த்தி விடுவார்கள். கூடவே,

"இப்போது
என் முன் இறைவன் தோன்றினால்
ஒரு வரம் தான் கேட்பேன்;
உன் கொலுசாய் நான் மாற...
ஏன்..? 
நீ கேட்கலாம்;
உன் இதயத்தை திருடியது
நான் என்று தெரியாமல்
இன்னொருவனுக்கு
மாலையிட்டு விட்டாயே...!" என்று நப்பாசை கவிதையும் வரைந்து தங்களுக்கு தாங்களே ஆறுதல் தேடிக் கொள்வார்கள்.

காதலுக்கு இரு பெற்றோர் தரப்பிலும் சம்மதம் கிடைத்துவிட்டால், அந்த பொழுதுதான் அந்த காதலர்களுக்கு உண்மையான சொர்க்கம். அப்போது,

"தேனைவிட இனியபொருள்
உண்டென்று உணர்ந்தேன்
உன் எச்சிலை
என் இதழ்
முதன் முதலாக ஈரப்படுத்தியபோது...!" என்று, எப்போதோ எதிர்பாராமல் நடந்த சம்பவத்தை சட்டென்று நினைத்து ஒரு ஹைக்கூ கவிதையும் தீட்டி, காதலியை வெட்கத்தில் நனைத்துவிடுவார்கள்.

வாலிப பருவத்தில் காதல் எண்ணங்கள் இல்லாமல் யாருமே இருக்க முடியாது. உடலில் சுரக்கும் பருவ வளர்ச்சிக்கான ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள்தான் அதற்கு காரணம்.

இந்த ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும்போது, அழகான பெண்களைப் பார்த்தால் ஆண்களுக்கும், மிடுக்கான ஆண்களைப் பார்த்தால் பெண்களுக்கும் பார்த்த மாத்திரத்திலேயே காதல் வந்து விடும். மனதிற்குள் ஒரு ரோஜாக்கூட்டமே மலர்ந்து மணம் வீசுவதுபோல் இருக்கும்.

காதல் வருவது இயற்கை. அந்த காதல் உங்கள் வாழ்க்கையை உயர்த்துவதாக, அதாவது உங்கள் படிப்புக்கு ஏற்றம் தருவதாக இருந்தால் நிச்சயம் காதலிக்கலாம். காதல் போதையில் முழுவதுமாக வீழ்ந்துவிட்டால்தான் ஆபத்து.

அதனால், உண்மையாக காதலியுங்கள். அந்த காதல் உங்களை, உங்கள் குடும்பத்தாரை இந்த சமூகத்தில் பெருமைப்படுத்துவதாக இருக்கட்டும்!